April 25, 2011
தொலைபேசி ராங்நம்பர் மூலமான காதல் கத்திக்குத்தில் முடிந்தது. 19 வயதான பார்த்திபன் என்பவரே காயமடைந்தவராவார்.
இவர் பெங்களுரு வினோபா நகரைச் சேர்ந்தவர். கடந்த மாதம் பார்த்திபன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவருக்கு முன்பின் அறிமுகமாகாத ஒரு பெண்ணின் அழைப்பு கிடைத்தது. இந்த ராங்நம்பர் விவகாரம் அப்படியே தொடர்ந்து இருவருக்குமிடையில் ஒரு உறவும் வளர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பார்த்திபனோடு தொடர்பு கொண்ட அந்தப் பெண் குரல் தன்னைச் சந்திக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. தான் எதிர்நோக்கவுள்ள ஆபத்தை அறியாத பார்த்திபன் உடனே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
ஜெயலக்ஸ்மி ரோட் பனஸ்வாதி அருகே மாலை 7.30 அளவில் அவர் சென்ற போது அவரை சுற்றி வளைத்த நால்வர், அவர் தான் பார்த்திபன் என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்ட பின் தாறுமாறாகத் தாக்கி நையப்புடைத்துள்ளனர். ஒருவர் ஒரு படி மேலே சென்று கத்தியால் பார்த்திபனின் வயிற்றிலும் மார்பிலும் சரமாரியாக குத்தியுள்ளார். மூவர் தனது கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள மற்றவர் கத்தியால் குத்தியதாக பார்த்திபன் வாக்குமூலமளித்துள்ளார்.
குத்துபட்டு வீதியில் மயங்கி விழுந்த அவருக்கு அடுத்த நாள் மருத்துவமனையில் தான் உணர்வு வந்தது. வீதியில் சென்றவர்களே அவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். பார்த்திபனுக்கு சுய நினைவு வந்த பின்பே அவரின் பெற்றோருக்கும், போலிஸாருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இவரது தொலைபேசி காதலியின் உறவினர்களே அவரைத் தாக்கியிருக்கலாம் என்று போலிஸார் நம்புகின்றனர். சந்தேக நபர்கள் பற்றி சில துப்பு கிடைத்துள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment